பீகாரில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்நிலையத்தை சூறையாடிய மக்கள்:
பீகார் மாநிலத்தில் தொழில்துறை நகரமான பெகுசராயின் பக்வான்பூர் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருக்கும், அப்பகுதி வழியாக சென்ற ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்றைய தினம் பக்வான்பூர் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த காவல்துறை வாகனம் மற்றும் பிற பொருட்களை கற்களை வீசி சேதப்படுத்தியதுடன், காவல் நிலையத்திற்கு செல்லும் சாலையையும் போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். இதன் காரணமாக பக்வான்பூர் கிராமமே கலவரபூமியாக காட்சியளித்தது.
போலீஸ் விசாரணை:
இந்த கலவரம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மற்ற காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் தலைமையில் வந்த போலீசார் கிராம மக்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் குறித்து பெகுசராய் நகர காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் கூறுகையில், இளைஞரின் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அதேசமயம் கிராம மக்கள் சில மர்ம நபர்களால் காவல் நிலையத்தைத் தாக்க தூண்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சியில் 2-3 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.