தொலைபேசியில் பேசிய தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில் மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
முருகேசனின் இளைய மகள் காயத்ரி(16). நேற்று இரவு இவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனையில் காயத்ரியின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி நகர காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காயத்ரி கடந்த சில நாட்களாக தொலைபேசியில் ஒருவருடன் பேசி வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது காயத்ரி தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசியதை கவனித்த பாலமுருகன், அவரை கண்டித்துள்ளார். அப்போது பாலமுருகனுக்கும் காயத்ரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலமுருகன் காயத்ரியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அவரது குரல்வளையை நெறித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த காயத்ரி மயக்கமடைந்துள்ளார். அதன் பின் காயத்ரியை பழனி அரசு மருத்துவமனைக்கு பாலமுருகன் சிகிச்சைக்காக அனுமதித்ததும், சிகிச்சை பலனின்றி காயத்ரி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனி நகர போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கை செல்போனில் பேசியதால், அவரது அண்ணனான பாலமுருகனே அவரை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுவாரஸ்யமான செய்திகள் படிக்க...