புதுச்சேரி : மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும்போது பக்கவாட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியதில் மூன்று பேர் உயிரிழப்பு. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள வசந்தம் நகரில் பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அதன் அருகில் இருந்த துணை மின் நிலைய பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலார்கள் சிக்கிகொண்டனர்.
இதனையடுத்து புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வரைந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டனர். அப்போது அங்கு தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, பாக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு உயிரருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.