தொழிற்சாலை மாவட்டம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையத்து கடந்த ஒரு வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். 

 

படப்பை குணா

 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது , நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.



நிலத்தை அபகரிக்க முயற்சி

 

மதுரமங்கலத்தைச் சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகள் ரூபாவதி இவர் சுங்காசத்திரம் அருகே உள்ள  கீரநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.  அன்னப்பனுக்கு சொந்தமான காலிமனை பட்டாவை படப்பை குணா,  சென்னை ஆயுதப் பிரிவு காவல் துறையில் பணிபுரிந்து வரும், அப்பு என்கிற சதீஷ்குமார், நாகராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 நபர்கள் ரூபாவதியை மிரட்டி வாங்கி சென்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி படப்பை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

காவலர் கைது

 

நில அபகரிப்பு வழக்கில் தொடர்பாக ஆயுதப்படை போலீசார் வெங்கடேசன் தேடும் குற்றவாளியாக இருந்து வந்தார்.  இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு நபர்களை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தேடி வருகின்றனர். காவல்துறையினர் கைது செய்த வெங்கடேசன் மற்றும் தற்போது தேடி வரும் காவலர்கள் இருவரும் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கைதான காவலர் வெங்கடேசன்


 

குணாவிற்கு உதவி செய்த காவலர்கள்

 

 படப்பை குணவிற்கு  செய்ததாக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் எழுத்தாளர் ராஜேஷ் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள குணாவின் வழக்குகளை முடிப்பதற்கும் வழக்குகளை, புகார்தாரர்களிடம் பேரம் நடத்துவதற்கும் கணிசமான தொகை மகேஸ்வரி வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் குணாவின் மனைவி வெற்றிபெற்ற பொழுது மகேஸ்வரிக்கு புத்தம் புதிய லேப்டாப் ஒன்றை பரிசளித்துள்ளார். 

 

அந்த லேப்டாப்பை காவல்துறை பணிகளுக்கு மகேஸ்வரி மற்றும் அதே காவல் நிலையத்தை சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ் ஆகிய இருவரும் பயன்படுத்தியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக  ராஜேஷ் ஆயுத படைக்கும், மகேஸ்வரி காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குணாவிற்கு உதவி செய்த  காவல்துறையினர் தற்போது அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து குணாவிற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 மாஸ்டர் பிளான்

 

குணா தனது சொந்த ஊரான மதுரமங்கலம் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் இளைஞர் இளைஞர்களுக்கு உதவி செய்து அவர்களை காவல் துறையில் சேர்த்து விட்டுள்ளார். அவ்வாறு அவர் சேர்த்துவிடும் காவல்துறையினர், அவருக்கு விசுவாசமாக அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது . இது தொடர்பாகவும் காவல்துறையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



போலி கொரோனா சான்றிதழ்

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த பிறகு குணா போலி கொரோனா சான்றிதழ் அளித்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்.  கொரோனா சான்றிதழை ஆய்வு மேற்கொண்டு போலி சான்றிதழ் என கண்டறிந்த   நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அரசியலில் படப்பை குணா

 

முன்னதாக குணா சிறையில் இருந்தபொழுது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய மனைவி எல்லம்மாள் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக அதிமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து  எல்லம்மாள் சுயேட்சையாக ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றிய தலைவர் பதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது திமுக வேட்பாளரும் எல்லம்மாள் இருவரும் சரிசமம் வாக்குகளை பெற்றால்,  குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர், ஒன்றிய தலைவர் பதவியை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படப்பை குணா சம்பந்தப்பட்ட தொடர்ந்து பல வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண