காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.டி.எஸ்.பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையத்து மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த படப்பை குணா திடீரென்று தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து அதே வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குணாவின் ஆதரவாளர்களை கைது செய்ய காவல்துறையினர், பழைய வழக்குகளை கையில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
பழைய இரும்பு கடையில் மாமுல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணுர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி கடையில் இருந்த பொழுது, திடீரென்று பிரபல ரவுடியான படப்பை குணா தனது கூட்டாளிகளான , போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகியோருடன் சென்று இந்த இடத்தில் கடை கடை நடத்த வேண்டும் என்று மாதம் 50,000 கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மிரட்டியது மட்டுமில்லாமல் கத்தியைக் காட்டி அவர் சட்டைப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பிடித்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பணத்தை கொடுத்து விடுமாறு சம்பந்தப்பட்ட நபர் கொஞ்சியும் அவர் கையில் கத்தியால் கிழித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த படப்பை குணா , சிவா , சேட்டு ஆகியோரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிவாவை காவல்துறையால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போந்தூர் சிவா
படப்பை குணா தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் தான் இந்த போந்தூர் சிவா என கூறப்படுகிறது. இவர் அதிமுகவின் பிரமுகராக சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் இவருடைய மனைவி தற்போது ஒன்றிய கவுன்சிலராக இருப்பது குறிப்பிடத்தக்கது. போந்தூர் சிவா தனது மனைவியை ஒன்றிய துணைச் சேர்மன் ஆக்குவதற்கு முயற்சி செய்து தோல்வி அடைந்தார். அரசியல் மற்றும் மறைமுக ரவுடிசம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கடைகளில் , மாதம் மாதம் மாமூல் வாங்குவது. சிறு சிறு தொழில் நிறுவனங்கள் மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டு வந்தார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.