அடையாளம்... பெரும்பாலும் தோற்றத்தை வைத்தே இங்கு கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒரு சிலரின் அடையாளம், அவர்களின் பணியை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அப்படி ஒருவரை தான், நாம் இங்கு பார்க்கப் போகிறோம். இவர் ஒரு இசையமைப்பாளர்; இவரை தெரிந்ததை விட, இவரது இசையை பலருக்கும் தெரியும். தெரிந்து கொள்ளும் அளவிற்கும், புரிந்து கொள்ளும் அளவிற்கும் பெரிய பெயர் இல்லை. நீட்டி முழக்காமல் முடித்து விடலாம், இவரது பெயரின் வார்த்தைகளை. ஆம்... இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ‛கே’ தான், இன்றைய கதாநாயகன். 




கிருஷ்ணகுமார் என்கிற பெயரில் பிறந்த நாகப்பட்டினம் பையன். இன்று 35வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர், இசைக்காக தனது பெயரை ‛கே’ என வைத்துக் கொண்டார். பெயரில் வித்தியாசம் இருந்ததாலோ என்னவோ, அறிமுகப்படுத்தியவரும் வித்தியாசமானவர் தான். 2011ல் வித்தியாசத்திற்கு பெயர் போன இயக்குனர் மிஷ்கினின் அறிமுகமாக, யுத்தம் செய் படத்தில் இசையமைப்பாளர் ஆனார் கே.


ஒரு த்ரில்லர் படத்திற்கு எந்த அளவிற்கு இசையால் பரபரப்பு கூட்ட முடியுமோ... அந்த அளவிற்கு பரபரப்பை பஞ்சமில்லாமல் தந்திருப்பார் கே. யார் இந்த இசையமைப்பாளர் என கேட்கும் அளவிற்கு இருக்கும் இசை. அடுத்த படமும், அதே மிஸ்கினுக்கு முகமூடி. ‛வாய மூடி சும்மா இருடா...’ பாடல், பட்டி தொட்டியெல்லாம் வாய் பேசியதை நாம் எல்லாரும் அறிவோம். 




ஏற்கனவே சொன்னது மாதிரி தான்.... யார் இந்த இசையமைப்பாளர் என தெரியாமலேயே, கே இசையை நாம் ரசிக்கத் தொடங்கினோம். ஒன்பதுல குரு, மகாபலிபுரம், காடு, 49 ஓ, கள்ளப்படம், கிருமி, ஆண்டவன் கட்டளை, அம்மனி, கள்ளன், பன்னிக்குட்டி, வானம் கொட்டட்டும் என கே பிளே லிஸ்ட் பெரியது. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் பிஸி இசையமைப்பாளர் கே. 2019ல் இலங்கையின் சிங்கள மொழி படமான காடி என்கிற படத்திற்கு இசையமைத்து சர்வதேச இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார். 


நிறைய குறும்படங்கள், நிறைய டாக்குமெண்ட்ரி என கே இசை புகாத இடமில்லை. இளம் வயதில், தன் தடங்களை எல்லா வழியிலும் பதித்த இசையமைப்பாளர். அவரது முதல்படமான யுத்தம் செய் பின்னணி இசைக்காக பிக் எப்.எம்., தமிழ் மெலோடி விருதை பெற்றவர். கிடைக்கும் படங்களை எல்லாம் தேர்வு செய்யாமல், அவர் தேர்வு செய்த படங்கள் எல்லாமே, பேசும் படமாக அமைந்தன. 


இன்று பிறந்தநாள் காணும் கே, உலகுக்‛கே’ கேட்கும் இசையாக மாற வாழ்த்துக்கிறது ஏபிபி நாடு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண