2001-ம் ஆண்டு மின்னலே ரிலீஸ்.  சரியாக 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடைசி இரண்டு ஆண்டுகளாக இசையமைத்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், 2021-ம் ஆண்டு தமிழ் ரசிகர்கள் அதிகம் கேட்ட பாடல்களின் ப்ளேலிஸ்ட்களில் இவரது பாடல்களுக்கென தனி இடம் உண்டு. ப்ளேலிஸ்ட்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் மனதை இசையால் வேட்டையாடி விளையாடியவர், அவரே ஹாரிஸ் ஜெயராஜ்!




அறிமுக படமே சூப்பர் ஹிட். அடுத்தடுத்து இவர் இசையமைத்த படங்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், எங்கேயும் சறுக்காமல் தொடர்ந்து மக்கள் ரசிக்கும் இசையை தந்து கொண்டிருந்தார். மின்னலே வெளியானதில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாரிஸின் பெரும்பாலான பாடல்களே ரிங்டோன்களாகவும், காலர் ட்யூன்களாகவும் செல்போன் புரட்சியில் பங்கெடுத்தன. அந்த ரிங்டோனகளை இப்போதும் ஆங்காங்கே கேட்க முடியும். அதில், ’ஜூன் போனால் ஜூலை காற்றே’ அப்போதே வைரல் ரகம்!


கமர்சியல் ரீதியாக வெற்றி பெறும் படங்களில் ஒரு சில பாடல்களை ஹிட் தரலாம். ஆனால், படத்தை காட்டிலும் அப்படத்தின் ஒட்டுமொத்த இசை ஆல்பமே ஹிட் அடித்து காலங்காலத்திற்கும் ரசிகர்களை கட்டிப்போடுமெனில் அது ஹாரிஸால் சாத்தியமாகி உள்ளது. மின்னலே படத்தில் தொடங்கி, மஜ்னு, லேசா லேசா, காக்க காக்க, கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அயன், எங்கேயும் காதல் என 2001-ல் இருந்து 2010-ம் ஆண்டு வரையிலான காலம் ஹாரிஸின் கோல்டன் பீரியட்.




அதற்கு பிறகான காலக்கட்டத்தில் ஹாரிஸ் இசையமைத்த பாடல்களும் ஹிட் அடித்தன. ஆனால், முதல் பத்தாண்டுகளில் அவர் இசையமைத்த பாடல்கள் அவரது கோல்டன் பீரியடில் உருவானவை. ரசிகர்களுக்கும் அந்த பாடல்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். ஆனால், ஹாரிஸின் பெரும்பாலான ஹிட் ஆல்பங்களுக்கு தக்க விருதுகள் கிடைக்காமல் இருந்தாலும், ரசிகர்களின் அங்கீகரம் பெற்ற இசையாகவே காலம் கடந்து ஒலித்து கொண்டிருக்கின்றன.


 


இந்த 20 ஆண்டுக்கால இசை பயணத்தில் 60-க்கும் குறைவான படங்களுக்குதான் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ்.  ஆனால், முதல் படத்தில் இருந்த புத்துணர்ச்சியும், ஸ்டைலும் சமீபத்தில் இசையமைத்த பாடல் வரை தொடர்கிறது. பாடலோடு பாடல் வரிகளும் தெளிவாய் கேட்கும்படியான இசை மெட்டும், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தனியே கேட்கும்படியான குவாலிட்டியான இசை ட்யூன்களை அமைப்பதும் ஹாரிஸின் தனி ஃபார்முலா!




ஹாரிஸ் - கெளதம் வாசுதேவ், ஹாரிஸ் - கார்த்திக், ஹாரிஸ் - தாமரை, ஹாரிஸ் - ஹரிஹரன் என நிறைய காம்போக்கள் ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால், ஹாரிஸ் - ஜீவா காம்போ மறக்க முடியாத ஒன்று! ஹாரிஸின் இசை பயணம் ‘peak’ல் இருந்தபோது  அவர் ஜீவாவோடு பணியாற்றி இசையமைத்த ஆல்பங்கள் தனித்துவமாக இருக்கும். இந்த காம்போ இன்னும் சில படங்களுக்கு நீடித்திருந்தால், வேற லெவல் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திற்கும். மிஸ் ஆகிவிட்டது!


இளையராஜா காலம், ஏ.ஆர் ரஹ்மான் காலமென்று இருக்குமெனில், நிச்சயம் ஹாரிஸ் காலம் என சொல்லும்படியான ஒரு இசை காலத்தை தனக்கென உருவாக்கி கொண்டு, ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றிருக்கிறார் என்பதை தவிர்க்க முடியாது! ஹாரிஸ் ரசிகர்களுக்கு, 2021 இன்னும் ஆரம்பமாகவில்லை. விரைவில் உங்களது இசையில் பாடல்கள் வெளியாவதற்காக வெயிட்டிங்! பிறந்தநாள் வாழ்த்துகள் ஹாரிஸ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண