தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே காதல் விவகாரத்தில் பயிற்சி டாக்டரை கடத்திச்சென்று அடி-உதை - திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் கைது - மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.


                                  

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊரைச்சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் முருகப்பெருமாள் (வயது 25) பல் மருத்துவரான இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.  இவரை கடந்த 18-ம் தேதி ஒட்டப்பிடாரம் முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த  ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவருமான இளையராஜா தனது அடியாட்கள் 2 பேருடன் வந்து, 18-ந்தேதி மதியம் 1.30 மணி அளவில் அரசு மருத்துவமனையில் பணி முடித்து திரும்பிய அரசு டாக்டர் முருகப்பெருமாளை மருத்துவமனை வளாகத்தில் வைத்தே வழிமறித்து TN 65 AA 7444 XUV வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் அருகே இளையராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அடைத்து வைத்து கொடுவாள், அரிவாள், இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் மாலை 6 மணி வரை முருகப்பெருமாள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்தும் மருத்துவர் முருகப்பெருமாளை  ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு கடத்திவந்து அங்கும் சுமார் 1 மணி நேரம் வரை துடிக்கத் துடிக்க அடித்து சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை பறித்துக் கொண்டு தெரிகிறது. இதையடுத்து அரைமயக்கத்தில் கிடந்த மருத்துவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன் மற்றும் பணப்பை ஆகியவற்றை அபகரித்துக் கொண்டு மீண்டும் அவரை, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்‌. அப்போது காரில் இருந்த நபர், "ஒரு மணி நேரத்தில், நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும். இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் குடும்பத்தையும் கூண்டோடு அழித்துவிடுவேன்" என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.


                                  

கொலை மிரட்டலையடுத்து டாக்டர் முருகப்பெருமாள் உயிருக்குப் பயந்து படுகாயத்துடன் மதுரையில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்குச்சென்று அடைக்கலம் புகுந்துள்ளார். இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் கடந்த 19-ம் தேதி இரவு 10 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


                                  

இதுதொடர்பாக மருத்துவர் முருகப்பெருமாள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்,  காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தென்பாகம் காவல் நிலைய  குற்ற எண் 844/21 பிரிவு 365, 342, 294(b), 324, 386,506(ii)IPC பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்து ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக ஊராட்சி ஒன்றிய தலைவர் இளையராஜாவின் அடியாட்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகரின் குடும்ப பெண் ஒருவருடனான காதல் விவகாரத்தில், பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாளை மிரட்டுவதற்காக கடத்திச் சென்று இளையராஜாவும் அவருடைய அடியாட்களும் அடித்து துன்புறுத்தியதாக தெரியவருகிறது. இருப்பினும் இதன் முழு பின்னணி என்ன? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.