சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி, கைதிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் மூர்த்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி மாரியம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயசந்திரன் ஆகியோர் விசாரணை செய்தனர். மனுதாரர் தரப்பில், மனுதாரர் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். 5 ஆயுள் தண்டனை என்றாலும், ஏககாலத்தில் தான் அனுபவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்கூட்டிய விடுதலை கோர முடியும் என்றார். இதையடுத்து நீதிபதிகள்," தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலத்திற்கானது. இதில், முன்கூட்டிய விடுதலை என்பது சட்டத்திற்கு உட்பட்ட அரசின் முடிவைச் சேர்ந்தது. எனவே, ஆயுள் சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட முடிவை தெரியபடுத்த வேண்டும் "என உத்தரவிட்டுள்ளனர்.
பல்வேறு கொலைகளில் ஈடுபட்ட 2 பேரை முன்கூட்டி விடுதலை செய்தததை ரத்து செய்யவில்லை என்றால் உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை
மதுரை காளவாசல் பகுதியைச்சேர்ந்த இளவரசி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 19.11.2020 அன்று திருச்சியில் என் சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் புறப்பட்டோம். அப்போது எனது கணவரை உமாசங்கர் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சந்திக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து அவர் எங்களுடன் திருச்சிக்கு வரவில்லை. எனது மகனை மட்டும் அழைத்துச்சென்றேன். அன்று இரவு எனது கணவரிடம் செல்போனில் பேசியபோது, உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ் பாண்டியன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது.
சிறிது நேரத்தில் என் கணவரை அவர்கள் கொடூரமாக கொன்றதாகவும், அவர்களை போலீசார் கைது செய்ததும் தெரிந்தது. உமா சங்கரும், சாய் பிரசாத்தும் கடந்த 2005-ம் ஆண்டில் குமரகுரு என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்து, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆணை பிறப்பித்துள்ளது. வெளியில் வந்த பின்பு தான் என் கணவரை கொலை செய்துள்ளனர். மேலும் சில கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதுரை, தேனி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். அவர்கள் முன்கூட்டியே விடுதலையானபோது, எதிர்காலங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற சிறைத்துறையின் நிபந்தனைகளை மீறியுள்ளனர். இவர்கள் வெளியில் இருந்தால் மேலும் பல கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். எனவே அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, "முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியில் வந்த 2 பேர் மனுதாரரின் கணவர் நாகேந்திரனை கொலை செய்துள்ளனர். உடனடியாக மனுதாரர் இளவரசி, அந்த 2 பேரின் விடுதலையை ரத்து செய்யும்படி 25.11.2020 அன்று தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு தரப்பில், மனுதாரர் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் உள்துறை செயலருக்கு, சிறைத்துறை இயக்குனர் பரிந்துரைத்து உள்ளார். ஆனால் அந்த பரிந்துரை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருத்தத்தை அளிக்கிறது.
உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்வது குறித்து வருகிற 23ஆம் தேதிக்குள் உள்துறை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து அதுபற்றி சிறைத்துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உள்துறை செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.