Online Rummy : திருநெல்வேலியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சிவன்ராஜ் (34). இவர் நேற்று முன்தினம் பணகுடி அருகே உள்ள தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்த அவர், சில மணி நேரத்திலேயே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிவன்ராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 


இதனை அடுத்து, போலீசார் கூறியதாவது, ”இவர் கடந்த சில நாட்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடி சிறு தொகையை முதலில் வென்றுள்ளார். இதனால் பேராசைப்பட்ட சிவன்ராஜ் ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடியுள்ளார். அதில் சிவன்ராஜ் தான் வைத்திருந்த மொத்த தொகையையும் இழந்துள்ளார்”.


மேலும், "ஆன்லைன் ரம்மியில் தான் விட்ட பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார்.  அதில் தான் கடன் வாங்கிய மொத்த பணத்தையும இழந்துள்ளார்.  மொத்தம் அவர் ரூ.15 லட்சத்தை இழந்துள்ளார். சிவன்ராஜ் அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்துள்ளதாக” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தற்கொலை எண்ணிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 38 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)