புதுடெல்லி: 3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 375ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


செக்டார் 39 நொய்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சலர்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளியான 75 வயதான அக்பர் அலி, மேற்கு வங்க கிராமத்தைச் சேர்ந்தவர். நொய்டா செக்டார் 45ல் உள்ள சலர்பூரில் வசிக்கும் தனது திருமணமான மகளைப் பார்க்க வந்துள்ளார். 


பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் அண்டை வீட்டாரின் மகள் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோரின் அறிக்கையின் அடிப்படையில் அக்பர் அலிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி, அக்பர் அலி சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி யாரும் இல்லாதபோது தனது மகள் வீட்டிற்கு அழைத்துச் சென்று டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இதைத் தொடர்ந்து, அக்பர் அலி செய்த இந்த மோசமான செயலால் பயந்தப்போன சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்து அக்பர் அலிக்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளன்ர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த குற்ற செயல் காரணமாக அன்று கைது செய்யப்பட்ட அகபர் அலி இன்று வரை மாவட்ட சிறையில் இருந்து வருகிறார்.


இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் சிங், சூழ்நிலை சான்றுகள், மருத்துவ அறிக்கை மற்றும் பிற எட்டு சாட்சியங்களின் அடிப்படையில் அக்பர் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அலிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. 


முன்னதாக, நொய்டா ஃபேஸ்-3 காவல் நிலையப் பகுதியில் ஏழு மாத பெண் குழந்தையை டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மனோஜ் லாலா என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், கடந்த ஜூன் 2022 ம் தேதி நொய்டா எக்ஸ்டென்ஷனின் தனது ஐந்து வயது குழந்தையை டிஜிட்டல் முறையில் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். 


டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?


'டிஜிட்டல் கற்பழிப்பு' என்பது டிஜிட்டல் சார்ந்த பாலியல் குற்றம் அல்ல. ஒரு பெண் அல்லது சிறுமியிடம் விருப்பமின்றி கை விரல்கள் அல்லது கால்விரல்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக பெண்ணின் பிறப்புறுப்பில் ஊடுருவும் செயலாகும். 


ஆங்கில அகராதியில் 'டிஜிட்' என்ற வார்த்தைக்கு விரல், கட்டைவிரல் மற்றும் கால்விரல் என்று அர்த்தம், அதனால்தான் இந்த செயலுக்கு 'டிஜிட்டல் ரேப்' என்று பெயர்.


டிசம்பர் 2012 வரை, 'டிஜிட்டல் ரெப்' பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டது. நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகுதான், நாடாளுமன்றத்தில் புதிய கற்பழிப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனது. இந்தச் சட்டம் பிரிவு 375 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டது.