கர்நாடகாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து, சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.




இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், செமங்கி, பூங்கொடை, முத்தனூர், கொம்பு பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டு பாளையம், நஞ்சை புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் குடியிருந்த 62 வீடுகளுக்குள் காவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்தது. வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக அங்குள்ள மாரியம்மன் கோயில் வரை வெள்ளநீர்  வந்து சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு செல்லும் வகையில் போடப்பட்டிருந்த கான்கிரீட் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.




இதனால் காவிரி ஆற்றில் வெள்ள நீரில் வரும் பாம்பு மற்றும் பல்வேறு வகையான விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றின் வெள்ளநீர் புகுந்து 62 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 165 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் தாசில்தார் மோகன்ராஜ், மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினர் தவிட்டுப்பாளையம் பகுதிக்கு விரைந்து வந்து வெள்ளம் புகுந்த வீடுகளை பார்வையிட்டு வீட்டுக்குள் இருந்த கட்டில்கள், துணிமணிகள், உணவுப்பொருட்கள், பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர்.




பாதிக்கப்பட்ட 165 நபர்களை தவிர்த்து பாளையத்தில் உள்ள ஊராட்சி சேவை மையம் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் உடனடியாக உணவுகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.




மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்று படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவும், நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல், காவிரி  ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசரகால உதவிக்கு, அவசரகால நடவடிக்கை மையம் 1077, காவல்துறை 100, தீயணைப்புத்துறை 101, மருத்துவ உதவி 104, ஆம்புலன்ஸ் உதவி 108, ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் காவிரி ஆற்று  பகுதிக்கு செல்லாமல் இருக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.