கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே செல்ஃபி எடுத்த புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் பள்ளிக்கல் ஆற்றில் இருந்து புதுமணத் தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களது சடலம் மீட்கப்படுவதற்கு முன்னர், இவர்களது உறவினர் அன்சல் கான் (22) என்பவரின் சடலம் சனிக்கிழமை இரவே மீட்கப்பட்டுள்ளது.
சித்திக் மற்றும் நௌஃபியா நௌஷாத் ஆகியோருக்கு ஜூலை மாதம் 16 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சித்திக்கின் வயது 28 மற்றும் நௌஃபியா நௌஷாதின் வயது 21 ஆகும். புதுமண ஜோடியை உறவினர்கள் விருந்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்று. அவ்வகையில் அன்சல்கான் என்ற உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். இதனால் தம்பதியினர் பள்ளிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள அன்சல் கான் வீட்டுக்கு சனிக்கிழமை வந்துள்ளனர்.
மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புதுமணத் தம்பதியிடம் அன்சல் கான் தனது ஊருக்கு அருகில் இருக்கும் ஆறு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அண்மையில் பெய்த மழையால் நீர் அதிகமாக போகிறது என தெரிவித்ததுடன், அங்கு அழைத்தும் சென்றுள்ளார். அன்சல் கானுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அருகில் உள்ள ஆற்றங்கரையை பார்ப்பதற்காக புதுமணத் தம்பதியும் சென்றுள்ளனர். ஆற்றில் அதிகப்படியாக நீர் சென்றதைப் பார்த்த அவர்கள் அங்கு செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் மீன்பிடிக்க வந்த அப்பகுதி மக்கள் சிலர் மூவரின் காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர். அதாவது சனிக்கிழமை இரவே அன்சல்கானின் சடலத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறை தீயணைப்பு படையினருடன் இணைந்து புதுமணத் தம்பதிகளான சித்திக் மற்றும் நௌஃபியா நௌஷாத் ஆகியோரின் உடல்கள் நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மோகத்தால் மூன்று உயிர்கள் பறிபோயுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
செல்ஃபி மோகத்தால் மக்கள் விலைமதிப்பில்லாத தங்களது உயிரை இழக்கும் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறித்து தகவல்களை மக்கள் எதிர்கொண்டாலும் கவனக்குறைவால் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.