தமிழ் சினிமாவின் உணர்வுப்பூர்வமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சசியின் முதல் படமான சொல்லாமலே வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

Continues below advertisement

சொல்லாமலே படம் 

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான சொல்லாமலே படத்தில் லிவிங்ஸ்டர், கௌசல்யா, விவேக், கரண்,  ஆனந்த், பிரகாஷ்ராஜ், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பாபி இசையமைத்த இப்படம் வித்தியாசமான கதையமைப்பால் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூலிலும் சாதனைப் படைத்தது. 

படத்தின் கதை 

வேலை தேடுவதற்காக நகரத்திற்கு வரும் கிராமத்து ஆளான லிவிங்ஸ்டன், கௌசல்யாவுடனான சந்திப்பில் தன்னை ஊமை என நினைக்க வைக்கிறார். பரிதாபத்தில் கௌசல்யா பழக, அவர்களின் நட்பு பின்னாளில் காதலாகிறது. ஆனால் தான் ஊமை இல்லை என்ற குற்ற உணர்ச்சியில் லிவிங்ஸ்டன் உண்மையை வெளிப்படுத்த முயல்கிறார். ஒரு கட்டத்தில் கௌசல்யாவுக்கு உண்மை தெரிந்து மன்னித்தும் விடுகிறார். ஆனால் லிவிங்ஸ்டனோ தான் சொன்ன பொய்யை உண்மையாக்கும் பொருட்டு தன் நாக்கை அறுத்து ஊமையாக மாறுகிறார். இதுவே சொல்லாமலே படத்தின் கதையாகும். இப்படம் வித்தியாசமான கிளைமேக்ஸால் பாராட்டைப் பெற்றது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளிவந்திருந்தாலும் சொல்லாமலே படம் ஒரு மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

சொல்லாமலே படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் 

காதலிக்காக நாக்கை அறுக்கும் காதலன் என யாராலும் நம்ப முடியாத ஒன்லைனை நம்ப வைத்ததில் சசியின் வெற்றி உறுதியானது.  முதலில் இந்தக் கதையில் பிரபுதேவாதான் நடிக்க இருந்தார். ஆனால் லிவிங்ஸ்டன் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமான சுந்தரபுருஷன் படத்தை ஆர்.பி. சௌத்ரி தயாரித்திருந்தார். அவரே சொல்லாமலே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அதன் பரிந்துரையின் பேரில் லிவிங்ஸ்டன் ஹீரோவாக மாறினார். 

க்ளைமேக்ஸ் காட்சிகளில் தான் மிகவும் சோர்வாக தெரிய வேண்டும் என்பதற்காக ஷூட் முடியும்  வரைக்கும் சாப்பிடாமல் லிவிங்க்ஸ்டன் இருந்துள்ளார். மேலும் படத்தில் அவர் சாரம் மீது ஏறி பெயிண்ட் அடிக்கும் காட்சிகளில் நடித்திருப்பார். அந்த சீனில் நடித்த பிறகு லிவிங்ஸ்டனுக்கு  சாரம் மீது ஏறி பெயிண்ட் அடிப்பவர்களை கண்டால் மரியாதை எழுந்துள்ளது. 

அதேபோல் ஊட்டியில் ஷூட்டிங் நடந்த போது பள்ளமான பகுதியில் ஒரு காட்சி எடுக்கப்பட்டிருந்தது. அப்போது கால் தடுக்கி விழுந்த கெளசல்யாவைப் பிடிக்கப்போய் லிவிங்ஸ்டன் கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். கண் முழித்து பார்த்தால் படக்குழுவினர் அடுத்த ஷாட்டுக்கு போகலாம் என கூறியுள்ளனர். ஆனால் அவர் மயங்கியதை சும்மா விளையாடுறீங்க என படக்குழுவினர் சொன்னார்களாம். 

சொல்லாமலே படம் வெற்றி பெற்றாலும் அதன்பிறகு சசி இயக்கிய எந்த படத்திலும் லிவிங்ஸ்டன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.