நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்குட்பட்ட பத்தமடை காவல் நிலையத்தில் ராமமூர்த்தி (வயது 50) என்பவர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வ வேலாயுதம் என்பவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு முக்கூடல் அருகேயுள்ள கபாலிபாறையை சேர்ந்த சங்கரகோணார் மனைவி பட்டம்மாள் என்பவரது பத்திரம் தொலைந்துவிட்டதாகவும், கண்டுபிடிக்க முடியவில்லை என்று முக்கூடல் காவல் ஆய்வாளர் கோகிலாவின் கையொப்பம் மற்றும் முத்திரை பதிந்து சான்று கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கடந்த மாதம் இந்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு பட்டம்மாள் அவரது மகன் முருகேசனுக்கு முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். எஸ்.எஸ்.ஐ. ராமமூர்த்தி போலியாக இன்ஸ்பெக்டர் கோகிலாவின் கையெழுத்தை போட்டது நெல்லை மாவட்ட எஸ்.பி.சரவணனுக்கு தகவல் கிடைக்கவே, அவரின் உத்தரவின் பேரில் முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராம மூர்த்தி மீது முக்கூடல் போலீசார் மோசடி, ஆவணங்களை தவறாக பயன்படுத்துதல் உள்பட 5 -க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்