நெல்லை மாவட்டம் பேட்டையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவருடைய மகன் நம்பி (30). இவர் பேட்டையில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் 4 பேர் அவரை பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகே வந்த போது அந்த கும்பல் நம்பியை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்து நம்பி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நெல்லை மேற்கு பகுதி காவல் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நம்பியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு அருகில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையான நம்பிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின் தற்போது தான் நம்பி பேட்டையில் உள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நம்பி நேற்று மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று நம்பிக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நம்பி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் நடுக்கல்லூர் மற்றும் பேட்டை பகுதிகளில் காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்...