இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அபாரமாக ஆடிவந்த நியூசிலாந்து அணி கடைசி 38 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இந்தியாவின் சார்பில் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சொந்த காரணங்களால் இந்த போட்டியில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக அணியில் மார்க் சாம்ப்மன் சேர்க்கப்பட்டார். அணையை டிம் சவுதி வழிநடத்தினார். டாஅஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் கை கோர்த்த கான்வேவும், பிலிப்ஸ்சும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் அடுத்த 10 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், ரன்ரேட்டை 9 அல்லது 10 எனபார்த்துக் கொண்டனர். இதனால் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 200 ரன்களை மிகச் சாதரண்மாக கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
போட்டியின் 16வது ஓவரை வீசிய முகமது சிராஜ் இந்த கூட்டணியை பிரித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 130-3 என இருந்தது. இதன் பின்னர் நியூசிலாந்து அணி தரப்பில் இருந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. கடைசி 30 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளையும் இழந்து, 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி வெற்றிபெற 161 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 49 பந்துகளில் 5 ஃபோர் 2 சிக்ஸ் என 59 ரன்களும், பிலிப்ஸ் 33 பந்துகளில் 5 ஃபோர் மற்றும் 3 சிக்ஸர் உட்பட 54 ரன்களும் எடுத்து அசத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் இன்னிங்ஸை இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் தொடங்கியுள்ளனர்.
குறுக்கிட்ட மழை
போட்டி நடக்கும் நேப்பியரில் அமைந்துள்ள மெக்லைன் பார்க்கில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதமானது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் போட்டி ரத்து ஆகவும் வாய்ப்புகள் இருக்கிறது எனச் சொல்லப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸ் மழைக் குறுக்கீடு இல்லாமல் முடிந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி கால தாமதமாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.