விருதுநகர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி, வயது 42. இவர் வெள்ளங்குளி பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பால பணிகளில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனத்தை மறித்த தென் திருபுவனம்  கிராமத்தைச்  சேர்ந்த போதை ஆசாமிகள் இருவர் வாகனத்தில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.


தட்டிக்கேட்டவர் வெட்டிக்கொலை:


போதை தலைக்கேறிய நிலையில் காரின் பின் பக்க கண்ணாடியையும், அடித்து உடைத்துள்ளனர். இதனை அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த கருப்பசாமி தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பின்னர் அருகில் உள்ள  திருப்புடைமருதூர் பகுதிக்கு சென்ற அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து வீரவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


தகவலறிந்த அவர்கள்  தகராறில் ஈடுபடும் போதை ஆசாமிகளை கைது செய்ய திருப்புடைமருதூர் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களை பிடிக்க முயலும் போது வீரவநல்லூர் காவல் நிலையத்தை சார்ந்த தலைமை காவலர் செந்தில்குமார்  என்பவரை கையில் வெட்டி விட்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடும் பணியை முடிக்கி விட்டார். அப்போது தனிப்படையினர் அவர்களை அங்குள்ள வயல் பகுதிகளில் தேட தொடங்கினர்.


சுட்டுப்பிடித்த போலீஸ்:


இந்த நிலையில் இருவரில் ஒருவரான பேச்சித்துரை என்பவர் தப்பி ஓடிய நிலையில், சீதபற்பநல்லூர்  பகுதியில் தப்பியோடிய போது காவல் துறையினர் அவரை கால் முட்டில் சுட்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான சந்துரு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே காயம்பட்ட காவலர் செந்தில்குமாரை மாவட்ட எஸ்பி மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற நான்கு சக்கர வாகனத்தை தாக்கி சாலை பணியாளர்  கொலை செய்துவிட்டு, பிடிக்க வந்த காவலரை தாக்கி பின் அங்கிருந்த அரசு பேருந்தை சேதப்படுத்தி சென்ற நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போதை ஆசாமிகள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பிடிக்க வந்த காவலரையும் தாக்கிய சம்பவம், காவல்துறையினர் ஒருவரை சுட்டுப் பிடித்த சம்பவம்   நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.