சென்னைக்கு நடிக்க வந்த இடத்தில் பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் தான் ஏமாற பார்த்த கதையை நடிகர் அம்பானி ஷங்கர் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


2005 ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷங்கர். தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி, பிறகு, ஆறு, பேரரசு, வல்லவன், கருப்பசாமி குத்தகைதாரர், இந்திரலோகத்தில் நா அழகப்பன், பட்டத்து யானை, அட்ரா மச்சான் விசிலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஷங்கர் நேர்காணல் ஒன்றில் தான் நடிக்க வந்த கதையை பற்றி கூறியுள்ளார். 


அதில், “நான் சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். அப்பாவுக்கு என்னை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுதான் சினிமாவுக்கு வருவதற்கு மூலக்காரணமாக இருந்தது. 2004 ஆம் ஆண்டு நேரத்தில் எல்லாம் நியூஸ் பேப்பரில் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வரும். இப்போது ஆடிஷன் என சொல்கிறார்கள். அதைப் பார்த்து தான் அப்பாவுடன் சென்னைக்கு வந்தேன்.


ஆனால் அந்த விளம்பரம் கொடுத்தவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என தெரிய வந்தது. அதிலிருந்து தப்பித்தோம். அதன்பிறகு பாக்யராஜ் சார் ஆபீஸூக்கு பக்கத்து தெருவில் அப்பாவின் நண்பர் ஒருவர் சீரியலில் அசோசியேட் இயக்குநராக இருந்தார். இப்போதைக்கு சீரியலில் வாய்ப்பு இல்லை. இருந்தால் சொல்கிறேன் என சொன்னார். 


அப்போது ஏதேச்சையாக இயக்குநர் பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் சினிமாவுக்குன்னு வந்தா ஒரு வேலை இருக்கணும்ன்னு அவர் சொன்னார். அப்படி இல்லை என்றால் போராட முடியாது என சொல்லி அவரின் பாக்யா வார இதழ் ஆபீஸில் வேலை போட்டுக் கொடுத்தார். இங்கேயே தங்கிக்கலாம் சம்பளம் கொடுக்கிறேன் என சொன்னார். அப்போது தான் கதை விவாதம் ஒன்றிற்காக லிங்குசாமி பாக்யராஜை சந்திக்க வந்தார். அவர் இயக்கிய ஜி படத்தில் கதையிலேயே அந்த சைக்கிள் கடை பையன் கேரக்டர் இருந்தது. லிங்குசாமியிடம் பாக்யராஜ் சார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பார்த்தவுடன் ஓகே என சொல்லி விட்டார். அதிலிருந்து முழு மூச்சாக சினிமாவில் தான் நடித்து வருகிறேன். 


எனக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். பொண்ணு 4ஆம் வகுப்பு படிக்கிறாள்.பையனுக்கு இப்பதான் 3 வயசு முடிஞ்சிருக்கு. என்னோட கேரியர் சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் அமையும்” என அம்பானி ஷங்கர் கூறியுள்ளார்.