நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மணலி விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். நகை வியாபாரியாக இருந்து வந்த நாகராஜனுக்கு திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதா புரத்தில் உள்ள நாக தேவதை சித்தர் பீடம் மற்றும் அறக்கட்டளை வைத்து நடத்திவரும் பா. இசக்கிமுத்து என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நகை வியாபாரி நாகராஜனிடம் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து என்பவர் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏபி ராஜ் என்பவருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாகவும், அவரிடம் இரிடியம் என்னும் விலை மதிக்க முடியாத பொருள் உள்ளதாகவும் அந்த பொருளை விற்று அதில் வரும் 2000 கோடி ரூபாய் பணத்தை தனது அறக்கட்டளையில் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அறக்கட்டளைக்கு வரும் பணத்தை பலருக்கு குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட இருப்பதாகவும் பல ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை உண்மை என நாகராஜன் நம்பி உள்ளார். அவ்வாறு குறைந்த வட்டிக்கு பணம் வழங்கப்பட வேண்டுமானால் நாக தேவதை சித்தர் பீட அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதோடு மட்டுமின்றி நாகராஜனிடம் நீங்கள் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினால் மிக விரைவில் 5 கோடியாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய நகை வியாபாரி நாகராஜன் தன்னால் முடிந்த அளவில் வீடு மற்றும் நகைகளை விற்று 30 லட்சம் வரை இசக்கிமுத்து & பாஸ்டர் ஏ பி ராஜ் என்பவரின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார்.
பணத்தை இழந்த நாகராஜன்
இந்நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு நகை வியாபாரி நாகராஜன் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேலும் கூடுதலாக பணம் வருகிற மாதிரி இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் சற்று காலதாமதம் செய்து வைத்துள்ளேன் என இசக்கிமுத்து கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நகை வியாபாரி நாகராஜன் பணம் கேட்கும் பொழுதும் இதே பதிலையே அறக்கட்டளை நிர்வாகி இசக்கி முத்து கூறிவந்துள்ளார். இதனால் நாகராஜனுக்கு கடனுக்கு மேல் கடன் அதிகமாகி ஊருக்குள் தலை காட்ட முடியாமல் தனது மனைவியின் நகைகள் மற்றும் தனது வீட்டினையும் விற்றுவிட்டு ஊரை காலி செய்து காரியாண்டி அருகில் உள்ள திருமலாபுரத்திற்கு சென்றுவிட்டார். நகை வியாபாரம் செய்து வந்த நிலையில் பணம் அனைத்தையும் இழந்து தற்போது கான்கிரீட் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு நாகராஜ் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தான் பணத்தை இழந்த விபரம் குறித்து வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். பின்பு ஹலோ போலீசில் நாகராஜன் புகார் அனுப்பியுள்ளார். பின்பு ஹலோ போலீசிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக தொடர்பு கொண்டு புகார் செய்யுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
இதனால் நாகராஜன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை புகாராக அளித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ.பி ராஜன் மற்றும், நாக தேவதை சித்தர் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து ஆகியோரிடம் நாகராஜன் தொலைபேசியில் பேசிய ஆடியோ, மற்றும் வீடியோ பதிவுகளையும் புகாரில் சமர்ப்பித்துள்ளார். மேலும் தனது புகார் குறித்து தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும், தன்னை ஏமாற்றிய கும்பல்களின், தொலைபேசி எண்களையும், வங்கி கணக்குகளையும் முறையாக ஆய்வு செய்து விசாரித்தால் தன்னைப் போல் ஏமாந்த பல பேர்களின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும் எனவும் புகார் அளித்துள்ளார். பணத்தாசை கண்ணை மறைத்த நிலையில் தன்னிடம் இருந்த நகை, பணம், வேலை என அனைத்தையும் இழந்து தற்போது கண் விழித்து கதறும் நிலைக்கு நாகராஜன் தள்ளப்பட்டு இருப்பது மேலும் இதனை நம்பி பணத்தை இழந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கோடிக்கு ஆசைப்பட்டு லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.