நெல்லை மாநகர் பகுதியில் உள்ளது  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்த அரசு உடமை வங்கியில் உள்ள ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்படுவதாக வங்கியின் சார்பில் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படி அச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் முப்பட் மற்றும் சலீம் ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் என தெரிய வந்த  நிலையில், அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இச்சூழலில் அரசுடமையாக்கப்பட்ட மற்றொரு வங்கியான எஸ்பிஐ  வங்கி ஏடிஎம்மில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட முயற்சித்துள்ளனர். அப்போது இருவரையும் கையும், களவுமாக மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 


நூதன கொள்ளை:


தொடரந்து சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் நகர் பகுதியில் உள்ள பல்வேறு எஸ்பிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து எவ்வாறு நூதனை முறையில் கொள்ளையடித்தனர் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் எஸ்பிஐ மற்றும் சிபிஐ வங்கிகளில் கணக்கு உள்ளது. இவர்கள் இந்த வங்கி கணக்கில் உள்ள தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அதிர்ச்சி தகவல்


பணம் எடுப்பது போன்று ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் வழங்கும் இயந்திரத்தில் தங்களது ஏடிஎம் கார்டுகளை போட்டு பணம் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஏடிஎம் மிஷினை ஆப் செய்து விடுகின்றனர். பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அதனை ஆன் செய்கின்றனர். அப்போது ஏற்கனவே எண்ணிய பணத்தை இயந்திரம் வெளியே தள்ளி விடுகிறது.. ஆனால் அவர்களது கணக்கில் பணம் குறைவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் தொடர்ந்து இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தப்பியோட்டம்... கைது..


இதனை அடுத்து கைது செய்யபட்ட இருவரையும் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர்  அவர்களை தீவிரமாக தேடும் பணி ஈடுபட்டு வந்தனர்.  4 மணி நேர தேடலுக்கு பின் ஒருவர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியிலும் மற்றொருவர் சதக்கத்துல்லா கல்லூரி அருகேயும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.  பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் குறையாமல் பணத்தை நூதன முறையில் திருடி வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.