ஸ்ரீ பெரும்புதூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

 

தலையில் பலத்த காயம்

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் நகர் நெமிலி மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தவர் சுகுமார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி நோக்கி சென்ற போது தண்டலம் சவீதா மருத்துவமனை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்காமல் இருக்க ஓரமாக சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

 

அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை சுகுமாருக்கு எந்த சிகிச்சையும் ஏற்றுக் கொள்ள வில்லை என தெரிந்து சுகுமார் மூளைச்சாவு அடைந்ததாக அவரது மனைவி மாலினியிடம் தெரிவித்துள்ளனர்.

 

சுகுமாரின் உடல் உறுப்புகள் தானமாக

 

ஏற்கனவே சுகுமார் நலமுடன் இருக்கும் போது கண் தானம் செய்வதாக மனைவி மாலினியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் , மாலினி தனது கணவரின் கண், சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். மாலினியின் கோரிக்கையை ஏற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகுமாரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரோடு இருக்கும் போதே கண் தானம் செய்ய முன்வந்த நபர் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் செய்த நிகழ்வு ஸ்ரீபெரும்புதூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

நெடுஞ்சாலை அலட்சியத்தாலே..

 

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , சாலையின் நடுவே பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டுக் கொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் இந்த விபத்திற்கு காரணம் என்று சுகுமாரின் உறவினர் சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேகர் நம்மிடம் தெரிவிக்கையில், நெடுஞ்சாலை துறை அலட்சியத்தாலே, இந்த விபத்து நடைபெற்று உள்ளது அவர்கள்தான் இந்த விபத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.