புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக ரங்கசாமி இருந்த போது ரூ.850 கோடி மதிப்பீட்டில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் 2010-ல் இக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது. இதற்கிடையில் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்பட்டு ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டிருந்தாலும், அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியால் இக்கல்லூரி திறக்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி தனிக்கட்சி:
இதற்கு பின்னர் முதல்வர் ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதாவது 2011-ல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற அந்த வருடத்தில் தான் இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இருந்தும் கல்லூரிக்கான அங்கீகாரம் பெறுவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும் தொடர் முயற்சியால் அவற்றையெல்லாம் சரி செய்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிரந்தர அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார். இந்த நிலையில், மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
பட்டமளிப்பு விழா
அப்போது நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், ”முதல்வர் ரங்கசாமியால் தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. பல காரணங்களால் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடைசியில் இந்த கல்லூரி உருவாக காரணமாக இருந்தவரின் கையால்தான் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது” என்று தெரிவித்தார். இயக்குனர் உதயசங்கரை தொடர்ந்து மணிமொழி என்ற முதுநிலை மருத்துவ மாணவி பேசும்போது, ”நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
மேடையிலேயே கண் கலங்கிய முதல்வர் ரங்கசாமி
இதற்கு முதல்வர் ரங்கசாமி தான் காரணம்” என்று மனமுருகி பேசினார். இவர்கள் அனைவரின் பேச்சையும் கேட்ட முதல்வர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு தன் கண்களில் இருந்து வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். தன்னால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இலவசமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து மருத்துவர்கள் ஆக பணியாற்றுவதை எண்ணியும், அவர்களுக்கு தற்பொழுது தனது கையாலையே பட்டங்களை வழங்குவதை நினைத்தும் ஆனந்தத்தில் முதல்வர் ரங்கசாமி மேடையிலேயே கண்ணீர் விட்ட சம்பவத்தை பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்