நெல்லை மாவட்டம் திருப்பணிகரைசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா(18). இவர் நெல்லை டவுண் கீழ ரத வீதியில் உள்ள ராஜம் டாய்ஸ் அண்ட் ஃபேன்சி என்ற கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை காந்திமதி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உடன் பணி செய்யும் நபர்கள் குடோனுக்கு சென்று பார்த்து  உள்ளனர். அப்போது சந்தியா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை  கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக இது தொடர்பாக அருகில் உள்ள நெல்லை டவுண் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் காவல் உதவி ஆணையாளர் சுப்பையா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடன் பணியாற்றும் ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுணில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் அதிகமான வணிக நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்களின் நடமாட்டம் என்பது எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள குறிப்பாக பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த  சந்தியாவின் உறவினர்களிடம் போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணகுமார் ஆய்வு நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ளவும் குற்றவாளி பிடிக்க தனிப்படை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் சந்தியாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.