நெல்லை மாநகர மகராஜநகரை அடுத்த வேலவர் காலனியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள். இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி ஜேர விட்டாமேரி. இவர் பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சத்துணவு பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். தொடர் விடுமுறையை அடுத்து இவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வேளாங்கண்ணி சென்றுள்ளனர். இந்த இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டும், நகைகள் கொள்ளை போனது அறிந்தும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து முருகப்பெருமாள் அருகில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் நகைகள் 6 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற துவங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில் பூட்டிய வீட்டில் 35 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்