சென்னை அடுத்துள்ள வேளச்சேரி நேரு நகர், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்.  இவரது மனைவி லட்சுமி வயது 50. தம்பதிக்கு செல்வி என்ற மகளும், மூர்த்தி  என்ற மகனும் உள்ளனர். பிளம்பர் வேலை செய்யும் மூர்த்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 3 வருடத்திற்கு முன் மூர்த்தியின் மனைவி மூர்த்தியை பிரிந்து சென்றார்.



இதனையடுத்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை வேலையாக மூர்த்தி செய்து வந்துள்ளார். இவர் கடந்த பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தாயிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த மூர்த்தி உணவு சாப்பிட்டுள்ளார். பின், மீண்டும் குடித்துவிட்டு தனக்கு பசிப்பதாக கூறினார். சாப்பாடு தீர்ந்துவிட்டதாக அவரின் தாய் கூறினார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்துவந்து, தாய் லட்சுமியின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்ததும் மூர்த்தி தப்பி ஓடிவிட்டார். இதன்பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரிந்தது.




இதுபற்றி அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பின்னர் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக லட்சுமியின் மகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதுகுறித்து வேளச்சேரி காவல்துறையினர் தெரிவிக்கையில் , மூர்த்திக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறு காரணமாக மூர்த்தியை அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான மூர்த்தி சரிவர வேலைக்குச் செல்வதில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று இதேபோல தாய் மற்றும் மகனுக்கு சண்டை ஏற்பட்டு உள்ளது அதில் தாயை மூர்த்தி கொலை செய்ததாக" தெரிவித்தனர்.

 

பெற்ற தாயை குடிபோதையில் மகன் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X