கொரோனா பரவலை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், மும்பையை தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இன்று இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதின. இந்த போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 


இரண்டாவது இன்னிங்ஸில் ஆர்சிபிக்கு ஒரே ஒரு விக்கெட்


ஓப்பனிங் களமிறங்கிய கில், வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். விக்கெட் இழப்பின்றி இரண்டாவது இன்னிங்ஸ் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் பந்துவீச்சில் கில் அவுட்டாகி அரை சதத்தை மிஸ் செய்தார். விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய பெங்களூரு அணி வீரர்கள், ஃபீல்டிங்கிலும் சொதப்பினர். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயர் 41* ரன்கள் எடுத்து கொல்கத்தாவின் வின்னிங் ஷாட் ஆடி முடித்து கவனத்தை பெற்றுள்ள்ளார். 10 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய கொல்கத்தா அணி, அதிரடி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த சீசனின் முதல் பாதியை சிறப்பாக தொடங்கிய ஆர்சிபிக்கு, இரண்டாவது பாதியின் முதல் போட்டியே மிகவும் சொதப்பலாக அமைந்துள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.






சொதப்பிய ஆர்சிபி பேட்டிங்


முன்னதாக, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டி, கோலிக்கு 200-வது ஐபிஎல் போட்டி. இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு படிக்கலுடன் கோலி ஓப்பனிங் களமிறங்கியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ ஆனதால் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து, கோலி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் முடிவும் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், ரிவ்யூவும் ‘லாஸ்’ ஆக கேப்டன் கோலி 5 ரன்களுக்கு வெளியேறினார். 


கோலியைத் தொடர்ந்து, அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். படிக்கல் மட்டும் 22 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல், ஏபிடி, ஹசரங்கா என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீரர்களும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில், 4 ஓவர்களை வீசிய தமிழ்நாடு வருண், 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். 19-வது ஓவரில் ரஸல் பந்துவீச்சில் சிராஜ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 19வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.