தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை மைக்கைப் பிடுங்கி தெலுங்கு நடிகர் மோகன் பாபு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நண்பர். மோகன் பாபுவின் இரண்டாவது மகன் மனோஜ் சொத்து விவகாரம் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே மோகன் பாபுவுக்கு மனோஜுக்கும் இடையே கைகலப்பு நடந்ததாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில், ஐதராபாத்திலுள்ள மோகன் பாபுவின் வீட்டிற்கு மனோஜ் சென்றுள்ளார். அப்போது பாதுகாவலர்கள் அவரை தடுத்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் மனோஜ் கேட்டை தள்ளிவிட்டுவிட்டு உள்ளே அத்துமீறி சென்றார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மோகன் பாபுவிடம் பேட்டி எடுக்க சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் மோகன் பாபு செய்தியாளர் ஒருவரின் மைக்கை பிடுங்கி தூக்கி வீசி தாக்குதல் நடத்தினார். இதில் பத்திரிகையாளர் காயமடைந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களிடம் மோகன்பாபு நடந்துகொண்டதைக் கண்டித்து அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சங்கங்கள் போராட்டம் நடத்தியது
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மோகன் பாபுவின் மகன் மனோஜ் இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ், "ஊடகங்கள் மீதான எனது தந்தையின் செயல் என்னை மிகவும் புண்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்திற்காக எனது ஊடக நண்பர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் தந்தை என் உயிர், எப்போதும் எனக்கு அவர் கடவுள் போன்றவர். ஆனால், என்னை எதிரியாக சித்தரித்த எனது சகோதரனின் நண்பரான வினய்யால் அவர் தவறாக வழிநடத்தப்பட்டார். நானும் என் மனைவி மௌனிகாவும் சமீபத்தில் ஒரு பொம்மை நிறுவனத்தை தொடங்கினோம். அந்த முயற்சியில் அவர்கள் எங்களுக்கு தடைகளையும் உருவாக்கினர்" எனத் தெரிவித்தார்.
மேலும், தனது தந்தை தன்னை முதலில் அடித்ததாகவும், தனக்கு ஆதரவான தாய் தன்னிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார். என்னுடன் பேசி சமாதானப்படுத்துவோம் என்று அம்மாவை சமாதானப்படுத்தினார்கள் ஆனால் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் என அனைத்து மக்களையும் சந்தித்து தனக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.