எந்த தொழில் செய்தாலும் அதில் ஆர்வமும், ஆர்வத்தில் ஆழமும் வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பே. இங்கே ஒருவர் தனது ஆர்வத்தால் ஏடிஎம் இயந்திரத்தின் ஆழத்தில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் அடுத்த அணியாபுரம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம், எப்போது பரபரப்பாக காணப்படும். அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவதால், பணம் எப்போதும் இயந்திரத்தில் நிரம்பி வழியுமாம். சமீபமாக ஏடிஎம் இயந்திரங்களில் நடந்து வரும் வினோதமான கொள்கை சம்பவங்களின் எதிரொலியாக, பொதுவாக ரோந்து வரும் போலீசார், ஏடிஎம் மையங்கள் மீது லேசாக ஒரு பார்வை வைத்து செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவில் அணியாபுரம் பகுதியில் ரோந்து வந்த போலீசாரும், அந்த ஏடிஎம் மையத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஏடிஎம்., மையத்தின் உள்ளே ‛ஹெல்ப் மீ.... ஹெல்ப் மீ....’ என சத்தம் வந்துள்ளது.
‛யாருடா... இந்த நேரத்தில...’ என வாகனத்தை விட்டு இறங்கி, ஏடிஎம் மையத்திற்குள் சென்ற போலீசாருக்கு ஒரே அதிர்ச்சி. நீச்சல் குளத்தில் நின்று கொண்டே நீந்துவதைப் போல, தகர்க்கப்பட்ட ஏடிஎம்., இயந்திரத்திற்குள்ளே இளைஞர் ஒருவர் ‛ஹவா... ஹவா...’ என செந்தில் பாணியில் நின்று கொண்டிருந்தார். ‛இங்கே என்னய்யா பண்றே...’ என போலீசார் கேட்க, ‛நஹி சாப்... ஆவோ சாப்...’ என, இந்தியில் பேசியுள்ளார் அந்த இளைஞர். ‛எங்ககிட்டயேவா...’ என போலீஸ், தங்கள் பாணியை காட்ட முயற்சிக்க, ‛சார் தெர்யும் தெர்யும் சார்...’ என, வழிக்கு வந்தார் அந்த இளைஞர்.
‛உள்ளே என்னய்யா பண்ற...’ என போலீஸ் கேட்க, ‛பணம் எடுக்க வந்தேன்...’ சார், என பதிலளித்திருக்கிறார் அந்த இளைஞர். ‛பணம் எடுக்க வந்துட்டு உள்ளே என்னய்யா பண்றே...’ என, போலீஸ் கேட்க, ‛அதான் சார்... பணம் எடுக்க வந்தேன்...’ என அப்பாவியாய் அந்த இளைஞர் கூற, ‛அடப்பாவி... மிஷின்ல இருந்த பணத்தை எடுக்க வந்தியா...’ என , கலகலத்த போலீஸ், அந்த இளைஞர் செய்த கோமாளித்தனத்தை வீடியோ எடுக்கத்துவங்கினர்.
ஒருபுறம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் அந்த இளைஞர் பற்றிய விசாரணையும் நடந்து கொண்டிருந்தது. பீகார் மாநிலம் கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்த பேந்தரராய் என்பதும், கோழிப்பண்ணையில் பணியாற்ற தமிழ்நாடு வந்ததும் தெரியவந்துள்ளது. கோழிப்பண்ணை ஊதியத்தை வைத்து கோடீஸ்வரன் ஆக முடியாது என்பதால், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஒரே இரவில் ‛கோன் பனேக்கா குரோர்பதி’ ஆக முயற்சித்ததும், அதற்காக கடலில் முத்து குளிப்பது போல, இயந்திரத்தில் இறங்கி பணத்தை எடுக்க முயற்சித்ததையும் பேந்தரராய் ஒப்புக்கொண்டார். பணம் எங்கு இருக்கும் என்பது கூட தெரியாமல், இயந்திரத்தின் உள்ளே இறங்கி மாட்டிக்கொண்டு பேந்த பேந்த விழித்த பேந்தரராய், கைது செய்யப்பட்டு சிறைச்சாலை அனுப்பப்பட்டார். அவர் சேதப்படுத்திய இயந்திரத்தை சரிசெய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.