மூத்த பாலிவுட் நடிகை சவிதா பஜாஜ்  தனக்கு பண உதவி வேண்டும் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்தவர் மூத்த நடிகை சவிதா பஜாஜ். 79 வயதாகும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “என்னிடம் இருந்த அனைத்து சேமிப்புகளும் வறண்டுவிட்டன. எனக்கு பண உதவி வேண்டும்” என உணர்ச்சிவசத்துடன் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக சினிமாத்துறையை நம்பியுள்ள மூத்த நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையில் இந்த நேர்காணல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து மேலும் கூறிய சவிதா பஜாஜ், “நான் மருத்துவ செலவிற்கே என்னுடைய பெரும்பாலான சேமிப்பை அழித்துவிட்டேன், நான் தீவிர சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளேன், இனிமேல் நான் என்னுடைய பொருளாதார சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை, 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் டெல்லியில் உள்ள எனது குடும்பத்துடன் தங்குவதற்கு ஆர்வம் காட்டினேன் ஆனால் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 




முன்னதாக  கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்து ஒன்றி சிக்கிய சவிதா பஜாஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது எழுத்தாளர்கள் சங்கம் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது. CINTAA அமைப்பு 50 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளனர். இதனை நினைவு கூர்ந்த சவிதா எனது வேலை மீண்டும் தொடங்கியவுடன், அவர்களின் பணத்தை திருப்பி தர வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.  மூத்த நடிகை ஒருவர் தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என  மற்றவர்களிடம் பண உதவியை எதிர்பார்த்து இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சவிதா பஜாஜ்  பிரபலமான பாலிவுட்  திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை . 1970-ஆம் ஆண்டு வெளியான  உஸ்கி ரோட்டி என்ற திரைப்படத்தில் எஜமானியாக நடித்து அசத்தியிருந்தார் . அந்த படத்திற்கு பிறகே இவர் நடிப்பை பாலிவுட் வட்டாரம் அங்கீகரிக்க தொடங்கியது. நிஷாந்த், நஸ்ரானா, மற்றும் பீட்டா ஹோ தோ ஐசா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  கடந்த  1981-ஆம் ஆண்டு வெளியான ராக்கி, 1996-ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணா, 2001-ஆம் ஆண்டு வெளியான ஷ்ஸ்ஸ்ஸ்ஸ்(ssshh) ஹோ கை ( koi hai) போன்ற படங்கள்  இவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தன. இது தவிர 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஷியாம் பெகலின் நிஷாந்த் என்ற நாடக திரைப்படத்திற்காக  சவிதா பஜாஜ், தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது