தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரி என்பது நாட்டிற்கு அளிக்கும் நன்கொடை அல்ல. அவரவர் கடமை என்று அறிவுறுத்தியது. மேலும், அவருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய், வெளிநாட்டில் இருந்து வாங்கிய மகிழுந்திற்கு செலுத்த வேண்டிய நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல. நீதிமன்றத்தால்  வழங்கப்பட்டத் தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரிவிலக்குக்காக தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப்போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக்கும்பல் அவரை குறிவைத்து தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.




தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரி செலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்தவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அவர் வரி ஏய்ப்பு செய்ததாக எந்தவித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது வழக்குத் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையில் இருந்து மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க கூடாது என்பதற்காகவே வரி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்பது நாடறியும். சோதனைகளின்போது விஜய் மீது எந்தவித குற்றச்சாட்டும் முன்னைக்கப்படவில்லை என்ற போதிலும் பா.ஜ.க.வின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது அவருக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விடுவது முழுக்க முழுக்க அரசியல் வெளிப்பாடே ஆகும்.


பொதுவாக அரசு அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள் என்ற அடிப்படை உண்மைகளை கூட உணராமல், வழக்குத் தொடர்ந்த ஒரே காரணத்திற்காக தம்பி விஜயை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த நாட்டில் வரி வரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களைச் சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது.




ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரி இருப்பதும், அது அனைத்துதரப்பு மக்களையும் கசக்கிப் பிழிவதும்தான் தவறு என்கிறோம். இது ஏதோ விஜய் என்ற ஒரு மனிதருக்கான பிரச்சனை இல்லை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. இந்த நாட்டின் வரிக்கொள்கையும், விதிக்கப்படும் முறையுமே சரியானதல்ல. அது யாவற்றையும் ஒட்டுமொத்தமாய் மாற்றி ஏழை மக்களைச் சுரண்டாத வகையில் அமைக்க வேண்டும். குறிப்பாக, ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்த பிறகு வியாபாரிகள், தொழில்துறையினர் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். மேலும், அறிக்கையின் தலைப்பில் அவதூறு பரப்புரைகளில் இருந்தும், மறைமுக அழுத்தங்களில் இருந்தும் மீண்டு வர தம்பி விஜய்க்கு துணை நிற்பேன்.