மும்பையில் தபால் நிலையங்களில் நிலையான வைப்புத் தொகை வைத்தால் அதிக வருமானம் பெற்று தருவதாகக் கூறி தம்பதியினர் 75 பேரிடம் இருந்து ரூ. 5 கோடி மோசடி செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்குச் சொந்தமான இரண்டு நிதி நிறுவனங்களில் உள்ள நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்து ஏமாற்றியுள்ளனர்.
மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ் சவுகான்(50). இவரது மனைவி வந்தனா சவுகான்(45). கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர்வசி பட்டேல் என்ற பெண்ணை இந்த தம்பதி அணுகியுள்ளனர். அப்போது கடந்த 15 ஆண்டுகளாக தபால் நிலையத்தில் வேலைப்பார்த்து வருவதாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர்.
இதை நம்பிய ஊர்வசி பட்டேல் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து அந்த தம்பதி ஊர்வசி பட்டேலுக்கு நிலையான வைப்புத் தொகையான 25,000 ரூபாய்க்கு நல்ல வருமானம் தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் தங்களுக்கு சொந்தமாக நியோனி இன்ஃப்ரா மற்றும் நியோனி வோர்ல்டு என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் உள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருவதாகவும் வந்தனா ஊர்வசியிடம் தெரிவித்துள்ளார். மாதம் மாதம் ரூ. 700 கட்டினால் 5 வருடத்திற்கு முடிந்தவுடன் ரூ.41,000 தருவதாக உறுதியளித்தார்.
இந்த திட்டத்தில் வந்தனாவின் மாமியாரும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். இருப்பினும், ஊர்வசி பணத்தை திரும்பப் பெற அணுகியபோது, அவரிடம் பல்வேறு சாக்கு சொல்ல ஆரம்பித்துள்ளார் வந்தனா. அதுமட்டுமில்லாமல் ஒருகட்டத்திற்கு மேல் அவரது தொலைபேசி அழைப்புகளையும் எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் வந்தனா. இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் ஊர்வசி. இதேபோல் ராஜூ கோகில் என்ற மற்றொரு நபரும் இந்த தம்பதிகளிடம் 1.5 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, மோசடி தம்பதி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பல பேரிடம் இதேபோன்று கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கபப்ட்ட ராஜூ கோகில் கூறுகிகையில், “சௌஹானையும் அவரது குடும்பத்தினரையும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தெரியும். கொலை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரும் அவரது மனைவியும் கலெக்ஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இரண்டு முதலீட்டு நிறுவனங்களைத் தொடங்கினார். மேலும் பலரை தனது திட்டங்களில் முதலீடு செய்ய அதிக லாபம் ஈட்டினார்” என தெரிவித்துள்ளார்.