மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மீரா ரோடு நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் 32 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு. அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இந்த கொலையானது கடந்த 2-3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும், அந்த பெண்ணை அவரது லைவ்-இன் பார்ட்னர் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
56 வயதான மனோஜ் சஹானி என்ற நபர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 32 வயதான சரஸ்வதி வைத்யாவுடன் மீரா ரோடு பகுதியின் கீதா ஆகாஷ் டீப் கட்டிடத்தின் ஜே பிரிவில் உள்ள பிளாட் 704 ல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், மூடப்பட்ட குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் அடிப்படையில், நயநகர் காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை உடைத்தனர். இதன் காரணமாகவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உள்ளே வந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கொலை செய்யப்பட்ட சரஸ்வதி பல துண்டுகளாக வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது சில பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சஹானி தனது குடியிருப்பில் இருந்து தப்பி செல்ல முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், “ மீரா ரோடி பகுதியில் உள்ள ஒரு சொசைட்டியில் இருந்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இங்கு ஒரு ஜோடி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் வெட்டிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்தார்.
கட்டிடத்தில் இருந்த பொது மக்களிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, இந்த ஜோடி தங்களுடன் பெரிதாக பழகவில்லை என்று தெரிவித்தனர். மேலும், அவர்களது குடியிருப்பின் கதவில் பெயர் பலகை கூட இல்லை, சோனம் பில்டர்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
மற்றொரு கொடூர சம்பவம்:
மும்பையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கால் சென்டரில் பணிபுரிந்து வந்த ஷ்ரத்தா, அஃப்தாப் என்ற நபரை சந்தித்து, டேட் செய்யத் தொடங்கினார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அங்கிருந்து இருவரும் டெல்லி சென்று, மெஹ்ராலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வீடு எடுத்து வசிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து அஃப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தத் தொடங்கிய நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, 300 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கி அவரது உடல் பாகங்களை பதப்படுத்தி வந்துள்ளார்.
மேலும் 18 நாள்கள் தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெளியே சென்று தனது காதலி ஷ்ரத்தாவின் உடல் துண்டுகளை டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வீசியெறிந்து வந்துள்ளார். இவ்வழக்கை ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ் மதன் வாக்கர் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வந்த காவல் துறையினர், கடந்த நவ.14 ம் தேதி அஃப்தாப்பை கைது செய்தனர்.