மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் தனது ஆண் நண்பரின் வீட்டில் தங்கியதால் அவரின் நடத்தையின் சந்தேகப்பட்ட ஊரார் அவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். மேலும் ஊர் முழுவதையும் கணவரை தூக்கிக் கொண்டு நடக்கவும் செய்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர அது போலீஸ் கவனத்துக்கு வந்தது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டப்பிரிவு 147, 354, 294, 323, 452, 509 மற்றும் 506ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தேவாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் சர்மா கூறுகையில், ஒரு வாரத்திற்கு முன்னர் அந்தப் பெண் காணாமல் போனார். அவரது கணவர் உதய்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் அப்பெண் தனது ஆண் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற அப்பெண்ணின் கணவர் அவரை வீட்டைவிட்டு வெளியே இழுத்துவந்து ஊரார் முன்னிலையில் தாக்கியுள்ளார். பின்னர் அவரை ஊர்ப்பஞ்சாயத்தில் நிற்கவைத்து முறையிட்டுள்ளார். அங்கு வழங்கப்பட்ட தண்டனையின்படி அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன் கணவரை தோளில் சுமந்து கொண்டு ஊரை சுற்றி வந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு 15 வயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். அதிலிருந்தே அவரது கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். துன்பம் பொறுக்க முடியாமலேயே அப்பெண் வீட்டைவிட்டு வெளியேறினார் என்று தெரிவித்துள்ளார்.
மபி.யின் இன்னொரு சம்பவம்:
நடத்தையில் சந்தேகப்பட்டு கிராம மக்களே ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைத்த சம்பவம் ஒருபுறம் இருக்க மத்தியபிரதேசத்தின் இன்னொரு பகுதியில் அரசு கொடுத்த நிலத்தை ஆக்கிரமித்த கும்பல் ஒன்று பழங்குடியின பெண்ணுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவரது கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மூன்று பேர் அந்தப் பெண்ணை அவரது நிலத்தில் வைத்து எரித்துக் கொல்ல முயன்றனர். ஆனால் படுகாயங்களுடன் அந்தப் பெண்ணை அவரது கணவர் மீட்டார். அந்தப் பெண் உயிருக்குப் போராடி வருகிறார். கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை என்று சொல்லும் அளவுக்கு அன்றாட நிகழ்வுகளாக இவை நடந்து கொண்டிருக்கின்றன.