கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்றுக் காகிதங்கள் உள்ளிட்ட சட்ட விரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது.




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாசுதேவன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்திவருகிறார். இந்நிலையில் வாசுதேவன் வழுதலைகுடியை சேர்ந்த 65 வயதான சோலையம்மாள், அவர் மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானமாக கிரய பத்திர பதிவு செய்து 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 




அதனைத் தொடர்ந்து வாசுதேவன் அசல், வட்டி என 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சோலையம்மாளிடம் கொடுத்துள்ளார். ஆனால் சோலையமாமாள் மற்றும் அவரது மகன் ஜெகவீரபாண்டியன் இருவரும் சேர்ந்து இந்த பணம் போதாது எனவும், மொத்தமாக  ஏழு லட்சம் கொடுத்தால் தான் பத்திர பதிவு ரத்து செய்து தருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவிடம் இது குறித்து புகார் அளித்தார்.




அதனை அடுத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா சீர்காழி காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் சீர்காழி காவல்நிலையத்தில் சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்வதற்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சோலையம்மா வீட்டில் சீர்காழி காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோலையம்மாள் இதுபோன்று பலருக்கும் வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கு ஈடாக அடமானமாக கிரயம் பெற்ற 30 பத்திரங்களளும், வெறும் கையெழுத்து மட்டும் போடப்பட்ட 11 வெற்று பத்திரங்கள் என  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பத்திர ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கந்துவட்டி வழக்கில் சோலையம்மாள் மற்றும் அவரது மகன் வீரபாண்டியன் ஆகிய இருவரையும்  கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண