மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்.எஸ்.பி நகரில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடி இருந்து வருபவர் 34 வயதான கார்த்திக். லாரி ஓட்டுநரான கார்த்திக், அவரது 21 வயது மனைவி பாரதி, 3 வயது மகன் கெளசிக் மற்றும் 8 மாத பெண் குழந்தை பவதாரணி ஆகியோருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் பாரதி தனது தாயாருக்கு போன் செய்து தான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பதறி போய் அவரது தாயார் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகளையும் வீட்டில் உள்ள அறையில் தூக்கிலிட்டு, வீட்டின் வராண்டாவில் பாரதியும் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இது குறித்து அக்கம் பக்கத்து வீட்டார், சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சீர்காழி காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பாரதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உள்ளிட்ட 3 பேரின் உடலையும் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக பாரதி எழுதிய வைத்துள்ள கடித்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. மேலும் பாரதியின் கணவர் கார்த்திக் சென்னையில் ஓட்டுநராக பணியில் உள்ள நிலையில் இன்று பணி நிமித்தமாக வெளிமாநிலத்தில் சென்று உள்ள நேரத்தில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்த்திக் மற்றும் பாரதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைப்பெற்று, பலரது வாழ்க்கை பாழாகிறது என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவிக்கிறார்கள்.