கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் ( 50). பெங்களூருவில் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவேணி (45). இவர்களுக்கு பிரியா (19), திரிஷா (17) ஆகிய 2 மகள்களும், விஷ்ணு (14) என்ற மகனும் உள்ளனர் . இதில் பிரியா பர்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திரிஷா மத்தூர் அரசுப்பள்ளியில் பிளஸ்-2 வும், சிறுவன் விஷ்ணு மிண்டிகிரி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் திருப்பதி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது . இவர்களின் காதல் குறித்து அறிந்த மகாலிங்கம், அம்சவேணி ஆகியோர் மகளுக்கு திருமணம் செய்ய குண்டலானூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு நிச்சயம்செய்து வைத்துள்ளனர். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.
அம்சவேணி தனது 2-வது மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகியோரை அழைத்துக்கொண்டு தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நள்ளிரவு 12 மணியளவில் குதித்தார். கிணற்றில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், நீரில் விழுந்து தத்தளித்த மாணவி திரிஷா கிணற்றில் அங்கிருந்த குழாயை பிடித்து உயிர் தப்பினார். அதேசமயம் அம்சவேணியும், சிறுவன் விஷ்ணுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழாயை பிடித்தவாறு விடிய, விடிய கிணற்றில் தவித்த திரிஷா காலையில் மேலே ஏறிவந்து கிராமத்தினருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் கிணற்றுக்கு விரைந்து வந்து இதுகுறித்து அவர்கள் மத்தூர் காவல்நிலையத்தில், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அம்சவேணி மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் தாய், மகன் 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாய் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050