விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய்  மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் வந்துள்ளது. கடந்த ஆண்டு சத்துணவு பணிக்காக அறிவிக்கப்பட்டு பின்னர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் வேலை வாங்கித்தருவதாக பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார். புகார் மனுவை பெற்றுள்ள காவல்துறை புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


முன்னதாக ஏற்கனவே அவர் மீது எழுந்த பண மோசடி புகாரில், 10 தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், நேற்று அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேலும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இதற்கிடையில் தனது வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு செய்தார். அந்த வழக்கு விசாரணை தாமதமானதால், விரைந்து விசாரிக்கவும் மறுமனு செய்துள்ள நிலையில் தான், தற்போது இரண்டாவது பண மோசடி புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர். 




 


ராஜேந்திரபாலாஜி மீதான முதல் புகார் விபரம்: 


கடந்த அதிமுக ஆட்சியில் பாலவளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும் அவரது நண்பர்களும் பாலவளத்துறை மற்றும் மற்ற அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரைத்தொடர்ந்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.  இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. 
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார். 




இந்நிலையில் பணமோசடி  செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜி கோரிய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி அவரை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடுதல் பணி நடந்து வந்தது. அவரது உறவினர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜியின் சகோதரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் , அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, உறவினர்களை விசாரணையின் பேரில் டார்ச்சர் செய்யக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.