உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை , சில மர்மகும்பல் கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் திங்கட்கிழமை (நவம்பர் 13) நடந்துள்ளது.
நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவர். இவர் கடந்த 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் தீபாவளி இனிப்புகளை வழங்குவதற்காக தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சில இளைஞர் கும்பல், அந்த மாணவரை கடத்தி அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்டிற்குள் வைத்து அந்த மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஒரு இளைஞர், மாணவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். மேலும் இந்த கொடூர செயலை வீடியோவுகாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பாதிக்கப்பட்ட மாணவனிடம் பணம் பறித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவனை அடித்து, சிறுநீர் கழித்ததாகவும், அந்தச் செயலை படம் பிடித்ததாகவும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பகீர் வீடியோ:
வீடியோவில், மாணவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்குகின்றனர். மாணவரின், தலையில் அடித்து, காலால் எட்டி உதைத்திருக்கின்றனர். மேலும், மாணவரின் வயிற்றில் காலால் உதைத்து, ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஒரு இளைஞர், மாணவர் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். மாணவர் கெஞ்சியும், அந்த நபர் தொடர்ந்து சிறுநீர் கழித்திருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் படிக்க
Crime: ஏற்கெனவே திருமணமானவரோடு காதல்: 31 துண்டுகளாக வெட்டப்பட்ட இளம்பெண்: பகீர் பின்னணி!