Atrocities On Dalits: சம்பள பாக்கி கேட்ட  பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குஜராத்தில் அவலம்:


சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.


பட்டியிலன இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:


குஜராத் மாநிலம் மேர்பி நகரில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனத்திற்கு  தலைமை வகிப்பவர் விபூதி படேல் என்ற பெண்மணி. இவர் மார்க்கெட்டிங் துறையில் நிலேஷ் தல்சானியா (21) என்பவரை ரூ.12,000 சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார்.  இருப்பினும், அக்டேபார்  18ஆம் தேதி திடீரென்று வேலையில் இருந்து நீக்கினார். என்ன காரணம் என்று எதுவும் சொல்லாமல் நிலேஷ் தல்சானியானியாவை வேலையில் இருந்து நீக்கினார் விபூதி படேல்.


இதனால்,  16 நாட்கள் பணியாற்றிய சம்பளத்தை தன் முன்னாள் முதலாளி விபூதி படேலிடம் கேட்டிருக்கிறார் நிலேஷ்  தல்சானியா.  ஆனால், விபூதி படேல் சரியான பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பலமுறை தல்சானியா கேட்டும் எந்த வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும், அவரது அழைப்புக்கும் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். 


இந்நிலையில், கடந்த புதன்கிழமை நிலேஷ் தல்சானியா, அவரது சசோதரர் மெஹுல் மற்றும் உறவினர் பவேஷ் படேல் ஆகியோர் அலுவலகத்திற்கு சென்று சம்பளத்தை கேட்டுள்ளனர்.  அப்போது, விபூதி பட்டேல், அவரது சகோதரர் ஓம் படேல் ஆகியோர் நிலேஷ் தல்சானியாவை தாக்கி உள்ளனர்.  விபூதி படேல், அவரது சகோதரர் மற்றும் அவரது பணியாளர்கள் சிலர் தல்சானியாவை தாக்கி  அவரை மொட்டை மாடிக்கு இழுத்து சென்றுள்ளனர்.  


சம்பளத்தை கேட்டதால் தாக்கிய முதலாளி:


அங்கு, அவரை  பெல்ட்டால் அடித்து, உதைத்து சரமாரியாக  தாக்கியுள்ளனர். மேலும், விபூதி படேல் அவரது செருப்பை தல்சானியா வாயில்  திணித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொன்னாலோ, புகார் கொடுத்தாலோ கொன்று விடுவேன் என்று மிரட்டியும் கேட்டிருக்கிறார். 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட நிலேஷ் காவல்நிலையத்தில புகார் அளித்தார். புகாரின் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபூதி படேல், அவரது சகோதரர் ஓம் படேல், மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த  சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.