அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு  அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனால், திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் விஜயபாஸ்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி. விஜயபாஸ்கர் 2013ம் ஆண்டில் இர்நுது 2021ம் ஆண்டு வரை வரை 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 

 

அண்மை காலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மழைக்கால காய்ச்சல் தடுப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்ரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தினமும் 30 முதல் 40 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் இதுவரை 7 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு குறையும் என்றும் குறிப்பிட்டார். 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேக்கம் உள்ளது. இதனால் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு கொசு தொல்லை அதிகரித்து வருவதாகவும், காய்ச்சல், சளி, இரும்பல் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் மதுரையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொல்லையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் தடுப்பு முகாமை தொடங்கியுள்ள தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

 

இதற்கிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கரின் உடல் நலம்பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.