சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உறவினர் 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், பா.ஜ.க. பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு புகார் ம அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிறுமியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. சிறுமியை பாலியல் தொழிலில் அவரை பராமரித்து வந்த உறவினர்களே ஈடுபட வைத்ததும், இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர், பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுமி புகாரில் அளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்ததுடன், சிறுமியின் வாழ்வை சிதைத்த அவரது உறவினர்கள், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான ராஜேந்திரன் ( வயது 44), எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி ( வயது 45) உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.


பொறுப்பான காவல் ஆய்வாளர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


600 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை கடந்தாண்டு பிப்ரவரி 16-ந் தேதி நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 96 நபர்களின் சாட்சியம் பெறப்பட்டது. விசாரணையின்போதே மாரீஸ்வரன் என்பவர் உயிரிழந்ததால், குற்றவாளிகளான 21 பேர் மீது விசாரணை நடைபெற்றது.


இந்த கொடூர சம்பவத்தில் 6 பெண்களும் குற்றவாளிகளாக இருந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப அளித்தது. அதில், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், காமேஸ்ராவ், முகமது அசாரூதின், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரண், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ். வெங்கட்ராம் , கண்ணன் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.


இதையடுத்து, இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மேற்கண்ட குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. மீதமுள்ள 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் விதித்துள்ளது.


மேலும் படிக்க : சல்லடை வைத்து சலிக்கும் போலீஸ்! பெட்ரோல் குண்டுவீச்சில் சிக்கிய 24 பேர்! வலையில் 250 பேர்


மேலும் படிக்க : நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை