கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்.
இந்த நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்திருந்தார்.
இந்த புகார் மனு மீது கடந்த இரண்டு தினங்களாக அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டதில் ஊராட்சி செயலாளர் நளினியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நான்கு நபர்கள் மீதும் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு நபர்களும் தற்போது தலைமாறை வாங்கி உள்ளனர். மேலும், வாங்கல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.