கர்நாடகாவில் கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஒரு கடிதம் சிக்கியது. 


கர்நாடகா மாநிலம் தச்சின கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பெலகாவி மாவட்டம் அதானி பகுதியைச் சேர்ந்த பிரக்ருதி ஷெட்டி என்ற மாணவி பயின்று வந்தார். 20 வயதான அம்மாணவியின் தந்தையின் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 


மாணவி பிரக்ருதி கல்லூரியின் தங்கும் விடுதியில் அறை எடுத்து மருத்துவம் பயின்று வந்தார். முதல் தளத்தில் அவரது அறை இருக்கும் நிலையில் நேற்று (நவம்பர் 13) அதிகாலை 3 மணியளவில் 6வது மாடிக்குச் சென்ற பிரக்ருதி ஷெட்டி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் என்னாச்சு என தெரியாமல் வெளியே வந்து பார்த்தனர். அப்போது பிரக்ருதி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 


உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி பிரக்ருதி தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். இதில் கடிதம் ஒன்று சிக்கியதாகவும், அதில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 


அதன்படி அந்த கடிதத்தில், ‘எனது உடல் மிகவும் பருமனாக இருக்கும் நிலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.இதனால் அடிக்கடி என் உடல் நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே வாழ்க்கை மேல் விரக்தி ஏற்படுகிறது. நான் தற்கொலை முடிவை எடுக்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)