மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகம் ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் தனிப்படை காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் வயது 27 என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். சோதனையில் வீட்டின் உள்ளே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரி மணிகண்டனை பிடித்து குத்தாலம் குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குத்தாலம் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து நாளுக்கு நாள் மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எல்லாம் பொருட்படுத்தாத பலர் பல குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் தங்களின் போதைக்காக வெவ்வேறு வழிகளை தேடி வருகின்றன.
Follow @GoogleNews: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்வதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை வஸ்துக்களை மறைமுகமாக விற்பனை செய்வது மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் தனிப்பட்ட அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தினந்தோறும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் இந்தக் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை என்றும், மேலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு, தனிப்பட்ட காவலர்கள் மற்றும் இன்றி காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவலர்களும் இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து இதனை முழுமையாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.