தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மார்க் மது பாட்டில்களின் அதிகபட்ச விலை வரிகள் உட்பட அதன் இறுதி விலை ரூபாய் என்று மது பாட்டில்களிலேயே  பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு  மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் டாஸ்மார்க் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இதனை அமைச்சர் தான் வசூலிக்க சொன்னதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் கடந்த சில நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருந்தார்.




இருந்த போதிலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் கூறி வருவதைக் காண முடிகிறது. இது தொடர்பாக மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் விடுத்தார். டாஸ்மாக் , மதுக்கூடங்கள் திறப்பில் எந்த வித விதி மீறல்களும் இருக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்கக் கூடாது. டாஸ்மாக் மதுக்கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.




அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு மதுவை விற்றால் அபராதத்தை வசூலிக்க வேண்டும். சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மதுபானங்களின் விலை பட்டியலை டாஸ்மாக் கடையின் முன் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்.பி மூலம் நடவடிட்க்கை எடுக்க வேண்டும். ஏதேனும் விதி மீறல்கள் இருந்தால் அதற்குரிய அபராதம் வசூலிக்க வேண்டும். பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என்றார். 




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை உள்ள பகுதிகளில் கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பேனரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க்களில் அதிகபட்ச விலை வரிகள் உட்பட என பிரின்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அனைத்து டாஸ்மார்க்ளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பத்து ரூபாய் யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக் கூடாது அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மார்க் இழுத்து மூடப்படும் அந்த கூடுதல் பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மார்க் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று பேனரில் உள்ளது.  




இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை உள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. பேனரை வைத்தவர்களே பேனரை கழட்டி எடுத்து சென்று விட்டதாகவும், டாஸ்மார்க் கடை மேலாளர் தெரிவித்தார். ஆனாலும் அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது 130 ரூபாய் குவாட்டர் மது பாட்டிலுக்கு 140 ரூபாய் டாஸ்மார்க் கடையில் வாங்குவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்து சென்றனர். இது ஒருபுறம் இருக்க மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதில் எதிர்த்து குரல் கொடுக்கும் பொதுமக்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஆவின் பால் விற்பனை நடைபெறுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.