பீகார் மாநிலம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்து கிடந்த நிலையில் சத்துணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா பகுதியில் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. அதன்படி, பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று கிச்சடி மதிய உணவாக  வழங்கப்பட்டது. இந்த சத்துணவை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்டனர். அதில் ஒரு மாணவருக்கு பறிமாறிய சாப்பாட்டில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது தான், சமைத்த உணவில் பாம்பு இருந்ததை கவனிக்கவில்லை என்ற உண்மை வெளி வந்துள்ளது.


உடனடியாக உணவு பறிமாறுவது நிறுத்தப்பட்டு, மாணவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனல் இந்த தகவல் தெரிய வருவதற்கு முன்பாகவே உணவை உட்கொண்ட மாணவர்கள் சிலவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த உணவு சாப்பிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு நடத்தினர். இந்த உணவுகளை தனியார் என்ஜிஓக்கள் தயார் செய்து வழங்கி வந்துள்ளனர். அவர்களிடம்  இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


முன்னதாக, கடந்த ஜனவரி மாதம்,மேற்கு வங்கம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மயூரீஸ்வர் நகரில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது. மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்டு சென்ற பின் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பாத்திரத்தில் பாம்பு இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக  ஊழியர்கள் பள்ளி நிர்வாகத்துக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். 


ஆனால், மதிய உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் பலர் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்ததுடன் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ராம்புர்ஹத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அங்கு மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, உணவு வெளியேற்றப்பட்டது. அதன்பின் மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளில் அனைவரும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாருக்கும் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.