மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக கீழநாஞ்சில்நாடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவன் அருகில் வந்து நீ எந்த ஊர்? என்ன ஜாதி? என்று கேட்டுள்ளார். 




அந்த மாணவன் தனது ஜாதியை (தாழ்த்தப்பட்டோர்) என கூறியுள்ளார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர் மாணவனை கன்னத்தில் அறைந்து தலையைப் பிடித்து சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்த அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து மாணவனை மீட்டு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். 




 


அதனை தொடர்ந்து உடல்நலம்  பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவனை தாக்கிய அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர். ஜாதியினை கேட்டு பொது வெளியில் பள்ளி மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.




மயிலாடுதுறையில் அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு. இளம் பெண் ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரகோத்தமன் என்பவரின் மனைவி 58 வயதான வத்சலா. ரங்கராஜ் என்பவரின் மகள் 28 வயதான அட்சயா. இவர் பொறியல் பட்டதாரி. இவர் வத்சலாவின் சகோதரி மகள் ஆவார். ஒரே வீட்டில் வசிக்கும் இவர்கள் இருவரும் இன்று மயிலாடுதுறை நகருக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டிவிஎஸ் மொபெட் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.




மயிலாடுதுறை நகரை நோக்கி இருவர் சென்றபோது பழைய சுங்க சாவடி அருகில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கிய வக்சலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.  தூக்கி வீசப்பட்ட அட்சயா படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அட்சயாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 




அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த 49 வயதான சின்னசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.