Aadhar: கைக் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் கார்டு பதிவு திட்டத்தை, அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை என மத்திய அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை
ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக்( கைரேகை, கருவிழி, உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் ஆதார் கார்டு என்பது இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது. இந்த அட்டையை பெறுவதற்கு சாதி, மதம் குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லை. இந்த ஆதார் கார்டு எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள், சேவைகளைப் பெற உதவுகிறது.
கைக்குழந்தைகளுக்கு ஆதார் கார்டு:
கைக்குழந்தைகள் உட்பட எந்த ஒரு வயதினரும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தைகள் 5 வயதை எட்டினால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தால், குழந்தை பருவத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை செல்லாமல் போய்விடும். இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கைக்குழந்தைகளுக்கான ஆதார் பதிவு அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த வசதி 16 மாநிலங்களில் உள்ளன. மிதமுள்ள மாநிலங்களில் விரிவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இதை மத்திய அரசு விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பயோமெட்ரிக்ஸ் முறை எதுவும் இல்லை. அவர்களின் UID ஆனது அவர்களின் பெற்றோரின் UID உடன் இணைக்கப்பட்ட மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. எனவே, குழந்தைக்கு 5 மற்றும் 15 வயது ஆனதும் பயோமெட்ரிக் அப்டேட் (பத்து விரல்கள், கருவிழி மற்றும் முகப் புகைப்படம்) குறிப்பிடப்படுகிறது.
134 ஆதார் அட்டைகள்
நாட்டில் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை, 650 திட்டங்கள் மாநில அரசுகளில் மற்றும் மத்திய அரசின் 315 திட்டங்களில் பயன்படுததப்படுகின்றன. கடந்த ஆண்டு, இந்த ஆதார் அட்டைக்கான புதுப்பிப்புகள் மற்றும் பதிவுகள் கிட்டத்தட்ட 20 கோடிக்கு அதிகரித்தன. இதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய எண்ணிக்கையில் 4 கோடி பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இப்போது நோக்கமாக உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதார் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு உள்ள மாநிலங்களின் முழுப் பட்டியல் உடனடியாகக் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் போதெல்லாம், UIDAI அமைப்புக்கு ஒரு செய்தி வரும், அதைத் தொடர்ந்து பதிவு அடையாள எண் உருவாக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தையின் புகைப்படம் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கணினியில் நகல் எடுக்கப்பட்டவுடன் ஆதார் உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது