மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடத்திற்கு சென்று நடிகர் மோகன் அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


1980 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நடிகர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, விதி, மௌன ராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, நெஞ்சத்தை கிள்ளாதே என அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. இதனால் ரசிகர்களால் மோகன் “வெள்ளிவிழா நாயகன்” என அழைக்கப்பட்டார். இவருக்கு “மைக் மோகன்” என்ற பெயரும் உண்டு. 






அதற்கு காரணம் மோகன் சில படங்களில் பாடகராக நடித்திருந்தார். அதில் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த கூட்டணியில் இளைய நிலா பொழிகிறதே, கூட்டத்திலே கோவில் புறா, நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம்  உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக உள்ளது. 






இதில் சங்கீத மேகம் பாடல் மோகனுக்கு எப்படியோ அதைவிட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பல மடங்கு பொருந்தி போகும் வரிகளை கொண்டது. அவர் மறைந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அப்பாடலில் வரும் வரிகளைப் போல இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இன்றும் அவரது பாடல்கள் நம்மை ஆட்கொண்டு தான் வருகின்றது. இதற்கிடையில் தற்போது மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார். 






விஜயஸ்ரீ இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் மோகன் திரையுலகில் தனது 40வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல நலத்திட்ட பணிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் திருவள்ளூரில் உள்ள தான் சினிமாவில் இவ்வளவு புகழ் பெற காரணமானவர்களில் மிக முக்கியவராக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 


அங்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நினைவிடத்தை சுற்றிப் பார்த்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.